சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனைய வருகை பகுதி ஆறாவது வாசல் அருகே இருக்கும் தொட்டியில் பயணிகளின் ஆதார், பான் கார்டுகள், அடையாள அட்டைகள் கொட்டி கிடந்ததை பார்த்து விமான பயணிகளும் அவர்களை வரவேற்க வந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிலர் கேட்டபோது அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் விமான நிலைய ஊழியர்கள் வைத்து சென்றதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் விமானத்தில் செல்ல வரும் பயணிகள் ஆதார் கார்டு, வருமான வரிக்கான நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு ஆகியவற்றை தவறுதலாக விட்டு செல்கின்றனர். இவற்றை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைப்பார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து பெற்று செல்வது வழக்கம். ஆனால் நீண்ட காலமாக யாரும் வரவில்லை. ஏனென்றால் கார்டுகளை தவறவிட்டவர்கள் இணையதளம் மூலம் புதிய ஆதார் கார்டுகளை எடுத்துக் கொள்கின்றனர். எனவே காரர்களை அப்புறப்படுத்தி உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.