நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு மைசூர் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு தினமும் வரவேற்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நின்று செல்ல ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே கோட்ட அதிகாரிகள் ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த ரயில் திருவள்ளூரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் சில ஊடகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்நிலையில் தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பா.குகனேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “திருவள்ளூரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது” என அவர் கூறியுள்ளார்.