ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக  உயர்த்தும் விதமாக மானியங்கள் வழங்கப்படுகிறது. அதேப்போல் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக ஒரு நபருக்கு ரூ.1500 வீதம் ரூ.11 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற விவசாயிகள் தாட்கோ மானியத்துடன் ட்ரோன்கள் வாங்குவதற்கு நிதி உதவி அளிக்கலாம் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஒரு ட்ரோனின் விலை ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையில் மானியம் அளிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.