சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் ஆகாய நடை மேம்பாலம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மேம்பாலத்தின் முழு பணிகளும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் அதன் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தற்போது புது தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், சுமார் 6000 மீட்டர் நீளம் மற்றும் நாலு புள்ளி 20 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை, வெயில் போன்றவற்றால் மக்கள் பாதிப்படையாக வண்ணம் மேற்கூரை அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. அதோடு மேம்பாலத்தில் ஒப்பனை அறைகள் அமைக்கப்படுவதோடு, முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக லிப்ட் வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.

பயணத்தை எளிமையாக்கும் வகையில் பேட்டரி வாகன சேவைகளையும் கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில், நடைபாதை வியாபாரிகள் மேம்பாலத்தை ஆக்கிரமித்து கடை போடாத அளவுக்கு ஷிப்ட் அடிப்படையில் போலீசாரை ரோந்து பணிக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த மேம்பாலத்தின் திறப்பு பணிகள் எப்போது நிறைவடையும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்தில் இறுதியில் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியானது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.