சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும் அதற்கான இயந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக ஏதாவது ஒரு ஐஐடிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படும் என 2023 – 2024 நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு சென்னை ஐஐடியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இது குறித்து கடந்த வியாழக்கிழமை மத்திய வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செயற்கை வைர ஆய்வகத்திற்கான இந்திய மையத்தை அடுத்த ஐந்து வருடங்களில் ₹242.96 கோடி மதிப்பில் சென்னை ஐஐடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. நகை வடிவமைப்பு நிறுவனங்களில் மட்டுமல்லாமல் செயற்கைக்கோள்கள், 5ஜி அலைக்கற்றை, கணினிசிப்கள்  போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களுக்கும் செயற்கை வைரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நகை உற்பத்தி, ஒளியியல் துறை, மருத்துவம், பாதுகாப்பு துறை போன்றவற்றிலும் இவை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ரூ.8,620 கோடி சந்தை மதிப்பை செயற்கை வைரங்கள்  கொண்டிருந்தது.

இது வரும் 2025 ஆம் ஆண்டில் ஐந்து மடங்காகவும் 2035 ஆம் ஆண்டு 15 மடங்காகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரசாயன நீராவி பதிவு தொழில்நுட்பம் மற்றும் உயர் அழுத்த – உயர் வெப்ப தொழில்நுட்பம் என இரண்டு தொழில்நுட்பங்கள் மூலமாக செயற்கை வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வகையில் ரசாயன நீராவி பதிவு தொழில்நுட்ப முறை செயற்கை வைரம் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணி வகித்து  வருகிறது. கடந்த 2021 – 2022 இல் மதிப்பீட்டின் படி உலக செயற்கை வைர வர்த்தகத்தின் இந்தியாவின் பங்களிப்பு 25.8 சதவீதமாக இருந்தது. ஆனாலும் முக்கிய இயந்திர பாகங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கு பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நீடித்து வந்தது. அதனால் இந்த இயந்திரங்கள் மூலப்பொருட்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.