சென்னையில் கடந்த சில நாட்களாகவே இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அது எந்த வகையான தொற்று என்பதை கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத்துறை தற்போது முன்னெடுத்துள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி வைரஸின் தன்மை மற்றும் அது குறித்த விவரங்கள் கண்டறியப்பட உள்ளது. அதற்கான ஆய்வக பரிசோதனை உபகரணங்கள் தெரிவிக்கப்பட்டு அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலியுடன் கூடிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையின் மூலம் ஐந்திலிருந்து ஏழு நாட்களுக்குள் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு விடலாம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.

இந்த வகை பாதிப்புகள் தீவிரமடையாமல் ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும் என பொது சுகாதாரத்துறை மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரியவரும் என்பதால் மக்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சலை எளிதில் வகைப்படுத்தி அறிந்து கொள்ள முடியும். தனிநபர் சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.