
இந்திய ரயில்வே புதிய முயற்சியாக, நாட்டில் முதன்முறையாக ஓடும் ரயிலில் ஏ.டி.எம் மெஷினை அமைத்துள்ளது. மும்பையிலிருந்து மன்மாட் வரை இயக்கப்படும் பஞ்ச்வாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த ஏ.டி.எம் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் பயன்பாடற்ற பகுதியில் இந்த ஏ.டி.எம் மெஷின் நிறுவப்பட்டு உள்ளது. இதன் மூலம் அனைத்து வகை பயணிகளும் எளிதாக பணத்தை எடுக்க முடியும்.
இந்த புதிய சேவை மகாராஷ்டிரா வங்கி மற்றும் மத்திய ரயில்வே இணைந்து மேற்கொண்ட புதிய திட்டமாகும். தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாக இருந்தாலும், ரயில் பயணங்களின் போது ரொக்கப் பணம் அவசியமாகிவிடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு ஏ.டி.எம் வசதியை தரும் நோக்கத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற ஏ.டி.எம் வசதிகள் மற்ற ரயில்களிலும் விரிவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.