முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக சிபிசிஐடி போலீசார் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை வைத்து விசாரணையை தற்போது தீவிர படுத்தியுள்ளனர்.‌ இந்நிலையில் கோட நாடு சம்பவம் நடைபெற்ற போது நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு கொடநாடு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றியது தொடர்பாக மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் பிறகு கர்சன் செல்வம், ஜெயசீலன் ஆகியோருக்கும்‌ சம்மன் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு மணிகண்டன், கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேரிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைமை காவலர் ஜேக்கப், உதவி ஆய்வாளர் அர்ஜுனன், எஸ்டேட் கணக்காளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப் பட்டுள்ளது. இவர்கள் 6 பேரிடமும் தலா 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் யாருக்கு சம்மன் அனுப்பப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முக்கியமான அரசியல் பிரபலங்கள் யாரேனும் சிக்குவார்களா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.