மதுரையில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டி களுக்காக போக்குவரத்து துறை சார்பில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இனிமையான இசை இயக்கப்படுகின்றது. இந்த இசையுடன் இரு சக்கர வாகனம் இருவர் செல்வதற்காக மட்டுமே, படியில் பயணம் நொடியில் மரணம் மற்றும் வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம் உள்ளிட்ட பல விதிமுறைகளும் ஒலிக்கப்படுகின்றன. இந்த புது அப்டேட் மதுரையில் உள்ள பல போக்குவரத்து சிக்னல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் இந்த கரோக்கி இசை ஒளிபரப்பு நடைமுறைக்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மதுரையில் 32 சிக்னல்களில் இந்த இசை ஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சிக்னலில் வாகனங்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகளை அமைதியான மனநிலைக்கு கொண்டு வரும் முயற்சியாக இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.