நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் மீனாவுடன் வாழத் தொடங்கிய பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் மீண்டும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியாகிய வீடியோவில், ஒரு செய்தியாளர் “சீமா ஹைதர்” என அழைத்ததைக் கண்டித்த அவரது வழக்கறிஞர் ஏ.பி. சிங், “இனி அவளை ‘சீமா ஹைதர்’ என்று அழைக்காதீர்கள், ‘சீமா மீனா’ என்று தான் கூற வேண்டும்” எனக் கடுமையாக சாடியுள்ளார். இது சமூகவலைதளங்களில் விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

 

இது குறித்த வீடியோவில், “அவளை சீமா மீனா என்று அழைக்க வேண்டும்!” என வழக்கறிஞர்  கூறுவது தெளிவாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு, PUBG விளையாட்டில் சச்சினை சந்தித்த சீமா, காதலுக்காக எல்லைகளைத் தாண்டி வந்தார். அவருடைய இந்த நடவடிக்கை, இந்திய ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் விவாதங்களை உருவாக்கியது. தற்போது, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய நெருக்கடியில், சீமாவின் சட்டபூர்வ இருப்பு மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சீமாவை சிலர் “துணிச்சலான பெண்” என புகழ்ந்தாலும், மற்றவர்கள் “சட்டவிரோத நுழைவாளருக்கு இடம் அளிக்கக் கூடாது” எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர். குழந்தைக்குத் தாயாகிய சீமாவின் நிலையை மனிதாபிமான கோணத்தில் பார்வையிட வேண்டும் என சிலர் வலியுறுத்த, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட கோணத்தில் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், சீமா மீனா என அழைக்கப்படவேண்டும் என்ற வழக்கறிஞரின் வாதம் சமூக ஊடகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.