நிபுணத்துவம் வாய்ந்த டெல்லி மருத்துவர்கள், ஒரு நபரின் உணவுப்பாதையில் சிக்கியிருந்த செயற்கைப் பல் செட்டை லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த நோயாளி, தவறுதலாகத் தனது பல் செட்டை விழுங்கியுள்ளார்.

மேலும் அது உணவுக் குழாயின் குறுகிய பகுதியில் மிகவும் ஆழமாகச் சிக்கிக்கொண்டதால், வழக்கமான எண்டோஸ்கோபி முறைகள் மூலம் அதை வெளியே எடுப்பது மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இந்தச் சிக்கலான சூழலில், மருத்துவர்கள் அதிநவீன ‘ஹோல்மியம் லேசர்’ கருவியைப் பயன்படுத்த முடிவு செய்தனர். லேசர் கதிர்கள் மூலம் அந்த செயற்கைப் பல் செட்டை சிறு துண்டுகளாக உடைத்து, பின் ஒவ்வொன்றாகப் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.

இந்நிலையில் வழக்கமாகச் சிறுநீரகக் கற்களை உடைக்கப் பயன்படும் இந்தத் தொழில்நுட்பத்தை, உணவுப்பாதையில் சிக்கிய பொருளை அகற்றப் பயன்படுத்தியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் இந்தச் சமயோசித முடிவால், நோயாளிக்கு எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.