அரசாங்கம் சென்ற மார்ச் 31 பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களை உறுதிப்படுத்தும் அடிப்படையில் ஏப்ரல்-ஜூன் 2023 காலாண்டில் ஏராளமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்களை 0.7% வரை உயர்த்தி உள்ளது. இதுபற்றி நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிஎப் மற்றும் சேமிப்பு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1% மற்றும் 4 சதவீதமாக வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மற்ற சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டிவிகிதம் 0.1% முதல் 0.7% வரை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலக்கட்டத்தில் தேசிய சேமிப்பு சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக துவங்கப்பட்ட சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி) போன்றவற்றின் வட்டி விகிதம் முறையே 8.2% (8 சதவீதத்தில் இருந்து) மற்றும் 7.5% (7.2 சதவீதம் வரை) அதிகரித்து உள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.