சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு தொகை கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதனை பெற விரும்பும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவை பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி புரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது. இதற்கு தகுதியுடைய நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.