சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கரு கலைப்பு செய்தது, போதிய உபகரணங்கள், மருத்துவர்கள் இல்லாததால் அதிகாரிகள் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது சட்ட விரோதமான செயல்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மற்றும் மருத்துவர் ஆகியோரிடம் இருந்து கடந்த ஜனவரி மாதம் ஆறாம் தேதி தனியார் மருத்துவமனை மீது புகார் வந்தது. கடந்த மே மாதம் இரண்டாம் தேதி விசாரணைக் குழுவின் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது ஸ்கேன் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது தெரியவந்தது.

மருத்துவமனை நிர்வாகத்தினர் மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவலர் உரிய விளக்கம் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த கடிதம் குறைபாடுகளுக்கு தொடர்பு இல்லாமல் இருந்தது. கடந்த 23-ஆம் தேதி விசாரணை குழுவினர் நேரடியாக மீண்டும் மருத்துவர் முன்னிலையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது, போதிய மருத்துவர் இல்லாதது, அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொதுநல மருத்துவர், அவசரகால மருத்துவர்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதனால் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மேலும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்ய ஆணையிடப்பட்டது.