ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இது முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பந்துவீச்சை  தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த அணியில் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் மற்றும் சால்ட் ஆகியோர் களமிறங்கி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டில் 138 ரன்கள் குவித்தது. இதனால் கொல்கத்தா அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணியில் பிரப் சிம்ரன் சிங் – பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய நிலையில், பிரப்சிம்ரன் சிங் 54 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்களில் அவுட் ஆன நிலையில், தொடக்கம் முதல் நிதானமாக விளையாடிய பேர்ஸ்டோ சதம் விளாசினார். இதனால் இந்த அணி 15 ஓவரில் 201 ரன்களை குவித்தது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஷஷாங்க் சிங் 68 ரன்களும், பேர்ஸ்டோ 108 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. மேலும் இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.