சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் காது- மூக்கு – தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு நடைபெற்றுள்ளது. காது -மூக்கு- தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் மருத்துவ குழு நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்த மாநாட்டில் எம்எல்ஏக்கள், எழிலன், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு காது -மூக்கு -தொண்டை மருத்துவ கூட்டம் தலைவர் டாக்டர் சி.திருமலை வேலு, பொருளாளர் டாக்டர் ச.ரகுநந்தன், செயலாளர் டாக்டர் எம் என் சங்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் நோக்கத்தில் மாநில அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட மருத்துவ படிப்பு நூல்களை தமிழில் மொழி பெயர்த்து அரசு  சார்பில் வெளியிட்டோம். தொழில்படிப்பு நூல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தமிழில் மருத்துவ மாநாடு நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மீதும் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு உள்ள அளவில்லா பற்றின் அடையாளமாக தான் இந்த நிகழ்ச்சி  சிறப்புடன் நடைபெறுகிறது.

அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளுக்கான காக்ளியர் அறுவை சிகிச்சையை இலவசமாக அளிக்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவும் மோகன் காமேஸ்வரர் தான் காரணமாக இருந்தார். இந்தியாவிலேயே 4,681 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. செவித்திறன் குறைபாடு சிலருக்கு பிறக்கும்போதே ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு காது கேளாமை அதிக அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மரபணு பிரச்சனையாகவும் சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.

அனைத்து மருத்துவ சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் மட்டும் வழங்கினால் போதாது. இதில் தனியார் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. அப்படி தனியார் மருத்துவமனைகள் பங்களிக்கும் போது அதன் சிகிச்சை கட்டணம் ஏழைகளுக்கு தகுந்தார் போல் அமைய வேண்டும். கல்வியும் மருத்துவமும் சேவை துறையாகவே செயல்பட வேண்டும். சென்னைக்கு மருத்துவ நகரம் மருத்துவ தலைநகரம் என்று தான் பெயர். உலகின் திறமையான மருத்துவர்கள்  தமிழ்நாட்டில் தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் மருத்துவ துறையில் தன் நிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.