
கேரள மாநிலம் படிஞ்சிட்டுமுரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக். கணித ஆசிரியரான அப்துல் மாலிக் கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றை நீந்தி சென்று வேலைக்கு செல்கிறார். அவர் சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் தினமும் 12 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். இதனால் காலை நேரம் அப்துல் மாலிக் ஆற்றுத்தண்ணீரை கடந்து பள்ளிக்கு செல்கிறார்.
அப்துல் மாலிக்கின் தினசரி பயணத்தில், தனது புத்தகங்கள், உணவு மற்றும் துணிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, டயர் குழாயில் கட்டி நீந்திச் செல்கிறார். இந்த நெடுந்தொலைவு நீச்சலுக்குத் தேவைப்படும் நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கும்.
அவர் பணியாற்றும் முஸ்லிம் கீழ்நிலை தொடக்கப்பள்ளிக்கு ஒருநாளும் விடாமல் நேரத்தில் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறார். இதனால் அவரை மாணவர்கள் “டியூப் மாஸ்டர்” என்று அன்புடன் அழைக்கின்றனர்.
மாலிக்கின் அர்ப்பணிப்பு கல்விக்காக மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்காகவும் பெரிதும் பாராட்டப்பட வேண்டியது. கடலுண்டி ஆற்றில் அதிகரித்து வரும் மாசுபாட்டை கண்டித்தும், அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர் தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து ஆற்றை சுத்தம் செய்யும் இயக்கங்களை நடத்தி வருகிறார்.
மலப்புரம் மாவட்ட கல்வி அதிகாரிகள் அவரின் உழைப்பையும், சூழல் உணர்வையும் பாராட்டி வருகின்றனர். “மாலிக் சார் கற்பித்தலில் மட்டும் அல்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முனைப்பிலும் சிறந்த முன்னுதாரணம்,” என மாவட்ட கல்வி அதிகாரி எஸ். ராஜீவ் தெரிவித்தார்.
அப்துல் மாலிக்கின் இந்த முயற்சி தற்போது சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. இது கிராமப்புறங்களில் கல்வியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.