சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சிந்த்காலோ கிராமத்தில் ஆனந்த் யாதவ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லை. அதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த ஆனந்த் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆனந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர் சாந்து பாக் என்பவர் பிரேத பரிசோதனை செய்தார். அப்போது உயிரிழந்த ஆனந்த்தின் தொண்டை பகுதியில் உயிருடன் கோழி குஞ்சு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த கோழி குஞ்சு சுவாச குழாய் மற்றும் உணவு பாதையை அடைத்து தான் மூச்சு விட முடியாமல் அவர் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறியதாவது, ஆனந்த் பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்தார். ஆனால் குழந்தை இல்லை. ஆனந்த் குழந்தை வரம் வேண்டி மாந்திரீகர்கள் ஜோதிடர்களை பார்த்து வந்தார். அவர்கள் சொல்லும் பரிகார பூஜைகளை செய்துள்ளார். தற்போதும் குழந்தை வரும் கிடைக்க ஜோதிடர் அல்லது மாந்திரீகர்கள் கூறிய பிறகுதான் அவர் கோழி குஞ்சை விழுங்கி இருப்பார் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.