சாப்ட்வேர் நிறுவனத்தில் மூத்த டெவலப்பர் பதவிக்கான இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பெண் நிபுணரிடம், HR இயக்குநர் கேட்ட கேள்வி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் வருங்காலத்தில் குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்களா?” என்ற கேள்வி, அந்த பெண் நிபுணரை மட்டுமல்லாமல், நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் பலரையும் கலக்கம் அடைய வைத்துள்ளது. அவரது அனுபவத்தை “HR asked me the strangest illegal question…” என்ற தலைப்பில் பகிர்ந்த அந்த நிபுணர், பேட்டி முழுவதும் சிறப்பாக நடைபெற்றதாகவும், இறுதியில் கேட்கப்பட்ட அந்த ஒரு கேள்வியால் அனைத்தும் மோசமாக முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த HR கேட்ட கேள்விக்குப் பதிலாக, தன்னை தவறாகக் கேட்டிருப்பார்கள் என நினைத்து மறுபடியும் கேட்கச் சொன்னேன். ஆனால், HR அதிகாரி அதையே மீண்டும் உறுதியாகக் கூறினார். அவர் “எங்கள் குழுவிற்கான திட்டமிடலில் இது தேவையான தகவல்” என்று கூறினார். இந்த முறையைப் பார்த்தவுடன் நான் பதிலளிக்க மறுத்தேன். அதை கேட்டதற்காக அவரை நேரடியாக எதிர்த்தேன். அதன் பின்பு நேர்முகத் தேர்வின் ஒட்டுமொத்த சூழ்நிலை சீரழிந்து விட்டது என அந்த நிபுணர் கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு பலர் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். “இந்த மாதிரியான கேள்விகள் பணியாளர் உரிமைகளை மீறும்,” என ஒருவர் கூறியிருந்தார். இன்னொருவர், “இந்த சம்பவத்தை தொழிலாளர் குறை தீர்க்கும் அமைப்புக்கு புகாரளிக்க வேண்டும்” என்றும், “அந்த நிறுவனத்தின் CEO-க்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி, இது போன்ற HR நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொழில்நுட்ப துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் மறைமுக ஆணாதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக பலரும் கருதுகின்றனர்.