
பிரபல காமெடி நடிகரான சந்தானம் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சுரபி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்த படத்தின் அடுத்த பாகம் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகி 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
அதில் பெருமாளின் பாடலான கோவிந்தா கோவிந்தா பாடலின் வரிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வழக்கறிஞர் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மேலும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நடிகர் சந்தானத்திற்கு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
படத்தை தயாரித்த நிகாரிகா என்டர்பிரைசஸ் நிறுவனம் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கிரிமினல் வழக்கு போடப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி எச்சரித்துள்ளார். இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கிய கிசா 47 பாடலை படத்திலிருந்து நீக்கியதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.