சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவு துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் ஓரிரு நாட்களில் முடிவு செய்வோம். நடப்பாண்டு பருவத்துக்கான சர்க்கரை உற்பத்தி நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57 லட்சம் ஹேக்டரில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் கரும்பு பயிரிட்டுள்ள நிலத்தின் அளவு 58 லட்சமாக உயர்ந்துள்ளது. தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை குறைந்தபட்சம் கிலோவுக்கு 42 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு விலையை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.