டி20 அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நீக்கப்பட்டதற்கான சரியான காரணத்தை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்..

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3:0 என ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் அனுபவமிக்க பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைமை பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் தோல்வியடைந்ததால், ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல். ராகுலின் டி20 வாழ்க்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சரியான காரணத்தை தெரிவித்துள்ளார்.

டி20 அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை சேர்க்காததற்கான காரணத்தை விளக்கிய ராகுல் டிராவிட், பணிச்சுமை நிர்வாகத்தின் கீழ் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் வீரர்களுக்கு பணிச்சுமை முக்கியமானது. பிசிசிஐயின் புதிய கொள்கையின்படி, இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியின்போது வீரர்களின் பணிச்சுமையை தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிக்கும் என்று கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக டிராவிட் கூறுகையில், பணிச்சுமை மேலாண்மை இன்று விளையாட்டின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இவற்றை நாங்கள் கண்காணித்து வருகிறோம். டி20 தொடரில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு பணிச்சுமை நிர்வாகத்தின் கீழ் ஓய்வு அளித்துள்ளோம்.

காயம் மற்றும் பணிச்சுமை மேலாண்மை 2 வெவ்வேறு விஷயங்கள்.. அதைக் கருத்தில் கொண்டு, இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலை ஏற்பட வேண்டும், முன்னுரிமை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். மேலும், பெரிய போட்டிகளுக்கு மூத்த வீரர்கள் இருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் சேர்க்கப்பட்ட வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடுவார்கள், ஏனெனில் அவர்களின் டி20 திறமைகளை புரிந்து கொள்ள உதவும் என்று டிராவிட் கூறினார். இந்திய அணிக்கு ஒவ்வொரு வகை ஆட்டத்திற்கும் வெவ்வேறு கேப்டன்கள் வழங்கப்படும் என்ற பேச்சையும் டிராவிட் நிராகரித்துள்ளார்.

கடந்த 6 போட்டியில் விளையாடியுள்ள கோலி மற்றும் ரோஹித் ஓய்வு எடுத்துவிட்டு புத்துணர்ச்சியோடு அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்றும், அவர்களின் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை என பேசியது கோலி மற்றும் ரோஹித் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது..