
விழுப்புரம் மாவட்டம் அலசல் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன்(48) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதியினருக்கு பவித்ரா(25) என்ற மகளும், அஜய் (18) என்ற மகனும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்த முருகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு கோவிலுக்கு சென்று கயிறு கட்டி வரலாம் என பரிமளா கூறியுள்ளார். அதன் பிறகு அவர் வெளியே சென்றதாக தெரிகிறது. திரும்பி வந்து பார்த்தபோது முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.