கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் உள்ளது அருள்மிகு மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில். இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், மாதரசி அம்மன் கோயில், மேடையாண்டி கோயிலில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகிறோம். 2020 முதல் உயர் சாதியினர் சிலர் எங்களை கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் தடுக்கின்றனர். உயர் சாதியினருக்கு சொந்தமான கோயில் என உரிமை கொண்டாடுகின்றனர், ஆனால் இது அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது.  சிவராத்திரி விழாவில் நாளை பூஜை செய்து வழிபாடு நடத்த ஆட்சியரிடம் அனுமதிகோரியிருந்தோம். ஆட்சியரிடம் மனு தந்தும் நடவடிக்கை இல்லை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த எங்களை வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தபோது, கோயில் வழிபாட்டில்  ஜாதிய பாகுபாடு காட்டக்கூடாது. அனைவரும் சமமாக, ஒரேமாதிரியாக நடத்தப்பட வேண்டும். மேலும் அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.