புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பனுக்கு, முருகேசன் மற்றும் பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ள நிலையில், முருகேசன் மாலத்தீவிற்கு வேலைக்காக சென்றிருந்தார்.

இளைய மகன் பாஸ்கரன் சாதி மறுப்புத் திருமணம் செய்து, பெற்றோரால் ஏற்கப்படாமல் தனது மனைவியை பிரிந்து, 5 வயதான மகனுடன் தனது பெற்றோர் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார்.

இந்த சூழலில், பாஸ்கரனுக்கும் விமலா இராணிக்கும் இடையில் திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தெரிந்ததும், பாஸ்கரனின் பெற்றோர் கண்டித்ததாகவும், அதனால் அவர்களை பாஸ்கரன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போது, விமலா இராணி தனது கணவரிடம் பாஸ்கரன் வலுக்கட்டாயமாக தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த முருகேசன், வெளிநாட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவில் வந்தார்.

பின்னர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பி பாஸ்கரனை கொலை செய்து, தனது தாய் வசந்தா மற்றும் தந்தை வீரப்பனுடன் சேர்ந்து, அந்த சடலத்தை வீட்டு அருகே உள்ள சாலையில் வீசி விபத்து போலவே அமைத்துள்ளார். மேலும், வீட்டில் ஏற்பட்ட இரத்தக்கறைகளை கழுவுமாறு  பெற்றோரிடம் சொல்லிவிட்டு, மீண்டும் வெளியூருக்குச் சென்று மறுநாள் இரவு தம்பியின் மரணத்துக்கு வருவது போல் நடித்து வீடு திரும்பியுள்ளார்.

பாஸ்கரனின் மரணம் சந்தேகத்துக்கிடமானதாக இருக்கவே, ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் மற்றும் முருகேசன், விமலா இராணி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தம்பியை கொலை செய்து விபத்து போலக் காட்சிப்படுத்த முயன்ற இந்த குடும்பத்தினரின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.