இஸ்ரேல் தனது தாக்குதல்களால் காசாவை குழந்தைகளுக்கும் பசியால் வாடும் மக்களுக்கும் சுடுகாடாக மாற்றி வருவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப் லசரினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தற்போது மிகவும் கொடூரமான மற்றும் திட்டமிட்ட படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது ஒரு சூழ்ச்சித் திட்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், காசாவின் உணவு விநியோக மையங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 615 பேர் ஐ.நா. உதவித் திட்டமான காசா மனிதாபிமான அறக்கட்டளையின் விநியோக மையங்களில் நேரில் தாக்கப்பட்டுள்ளனர்.
பசியை ஆயுதமாகக் கொண்டு மக்களை துன்புறுத்தும் இஸ்ரேலின் இந்த செயற்பாடு இனப்படுகொலைக்கே ஒப்பானது என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காசாவில் தற்போது சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது என ஐ.நா. உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மத்திய காசாவில் டெய்ர் அல்-பலா பகுதியில் மட்டும் 13 பேர் மற்றும் தெற்கு காசாவின் கான் யூனிஸில் 15 பேர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை காசாவில் 57,762 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 137,656 பேர் காயமடைந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
