குவைத் நாடு சர்வதேச அளவை பண மதிப்பில் வலிமை மிகுந்த ஒரு நாடாக இருக்கிறது. இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டால் ஒரு குவைத் தினார் என்பது இன்றைய நிலவரப்படி 268 ரூபாய் 20 பைசா. இதனால் இந்த நாட்டில் பணிபுரிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .குறிப்பாக இந்தியர்கள் பலரும் குவைத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். குவைத் நாட்டில் மின்கட்டணம், குடிநீர் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட கட்டணங்களை உரிய நேரத்துக்கு செலுத்த வேண்டும் இல்லை என்றால் வெளிநாடு செல்ல முடியாது என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்புகளின் படி வெளியூர் மற்றும் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் sahel என்ற ஆப்பில் பார்க்கலாம் என்று குவைத் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ஆப் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. குவைத் அரசால்  உருவாக்கப்பட்டு அந்த நாட்டில் வாழும் மக்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் இதன் மூலமாக செலுத்தி விடலாம்.

இதற்காக தங்களுடைய குடியுரிமை சார்ந்த சிவில் ஐடி-ஐ ஆப்பில் பதிவிட வேண்டும். குவைத்தில் தங்கி இருந்தால் போதும். அவர்கள் உள்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,வெளிநாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அந்நாட்டு அரசிடமிருந்து  சிவில் ஐடியை பெற்றிருப்பது அவசியம். குவைத் நாட்டில் வசிப்பவர்கள் தங்களுடைய குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்காக சாகல் என்ற ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதை டவுன்லோட் செய்து தனிப்பட்ட விவரங்கள் சிவில் ஐடி விவரங்களை பதிவிட்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.