
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டியில் நந்தகணேஷ் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மணப்பெண் வேண்டி பல்வேறு திருமண தகவல் மையத்தில் பணம் கட்டி பதிவு செய்துள்ளார். பேஸ்புக் மூலம் நந்தகணேசுக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த 13-ஆம் தேதி இளம் பெண் நந்த கணேசன் தேடி கருமத்தம்பட்டிக்கு வந்து விட்டார். அந்த இளம் பெண் நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். உடனே நந்த கணேஷ் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
உறவினர்கள் முன்னிலையில் மறுநாள் அவர்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருப்பது தெரியவந்தது. செல்போன் சிக்னல் மூலம் அவர் கருமத்தம்பட்டியில் இருப்பதை அறிந்து போலீசார் அங்கு சென்று இளம் பெண்ணுக்கு அறிவுரை கூறி அழைத்துச் சென்றனர். பேஸ்புக் காதலால் திருமணம் செய்து கொண்ட நந்த கணேஷ் ஏமாற்றமடைந்தார். குழந்தையை விட கள்ளக்காதலன் தான் முக்கியம் என அந்த இளம் பெண் முடிவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.