
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த சாரா கான், 2017ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்திய குடிமகன் ஔரங்கசீப் கானை திருமணம் செய்துக்கொண்டு, அதன் பிறகு இந்தியாவில் வசித்து வந்தார். சமீபத்தில் சி-பிரிவு அறுவைச் சிகிச்சை செய்துள்ள இவர், தனது 14 நாள் குழந்தையை மடியில் சுமந்தவாறே, அட்டாரி-வாகா எல்லையில், காலணிகளுடன் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்ற உணர்ச்சிகரமான காட்சி அனைவரது இதயத்தையும் தொடுவதாக அமைந்துள்ளது.
“என் அறுவைச் சிகிச்சை தையல்கள் இன்னும் காயவில்லை; மருத்துவர்கள் என்னை பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். என் குழந்தை இந்திய குடிமகன். எனவே நான் இங்குள்ள என் குடும்பத்துடன் தங்க அனுமதிக்க வேண்டும்” என அவர் செய்தியாளர்களிடம் வேதனையுடன் கூறினார். ஆனால், எந்த பதிலும் கிடைக்காமல், நிரம்பிய கண்ணீருடன் எல்லை வழியாக புறப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, இந்தியரை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தானியர்கள், தங்கள் குடும்பத்துடன் கூட இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சாரா கான் போன்ற பலர் – பெரும்பாலும் பெண்கள் – தங்கள் குழந்தைகளை, குடும்பத்தை விட்டும் பிரிந்து, அவர்களுக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தான் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.