தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், தன் நடத்தையின் மீதும் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதும் கணவன் மற்றும் மாமியார் சந்தேகம் கொண்டு டிஎன்ஏ சோதனை செய்ய வற்புறுத்தியதால் மனமுடைந்த 5 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடிபெட்டப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும், சுஷ்மிதா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இதில் சிறிதும் மகிழ்ச்சியடையாத அபிலாஷ் மற்றும் அவரது தாயார், சுஷ்மிதாவின் நடத்தையில் தேவையற்ற சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும், வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி சுஷ்மிதாவை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
ஆனால், தன் கற்பை அவமானப்படுத்தும் இந்த டிஎன்ஏ பரிசோதனையில் சுஷ்மிதாவிற்கு சிறிதும் விருப்பம் இல்லாததால், அவர்களுக்கிடையே அவ்வப்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் சுஷ்மிதாவின் வளைகாப்பு விழா குறித்துப் பேசுவதற்காக அவரது பெற்றோர் நேரில் வந்திருந்தபோதும், இந்த டிஎன்ஏ பரிசோதனை விவகாரத்தை எடுத்துரைத்து அபிலாஷ் தரப்பினர் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கடும் அவமானத்திற்கும் மனவேதனைக்கும் உள்ளான சுஷ்மிதா, கடந்த வியாழக்கிழமை அன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சுஷ்மிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மகளை கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்தியதே தற்கொலைக்குக் காரணம் என சுஷ்மிதாவின் தாய் ஜனா பாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
