
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது 1,10,000 எக்டேர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, மலர்கள், கண்வலி கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் தமிழக வேளாண் துறை மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறைந்த நீர் பயன்பாட்டில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரலாம். 2025-26 நிதியாண்டிற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 3,747 எக்டேர் பரப்பளவுக்கு ரூ.37.63 கோடி நிதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்குறிய துணைத் திட்டங்களாக, பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு/குழாய்கிணறு அமைத்தல் (50% மானியத்தில் ரூ.25,000 வரை), டீசல் பம்ப் செட் அல்லது மின் மோட்டார் நிறுவுதல் (50% மானியத்தில் ரூ.15,000 வரை), பாசன குழாய் நிறுவுதல் (50% மானியத்தில் ரூ.10,000 வரை), பண்ணைக் குட்டை அமைத்தல் (50% மானியத்தில் ரூ.75,000 வரை) ஆகியன வழங்கப்படுகின்றன. இதனை நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்த விவசாயிகள் மட்டும் பெற முடியும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகம், 3.5X4.5 அளவிலான 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் சென்று அணுகலாம். மேலும், https://tnhorticulture.tn.gov.in:8080/ என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தும் பயன்பெறலாம். மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் மாவட்ட horticulture அலுவலகத்தை தொடர்புகொண்டு கூடுதல் தகவல் பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.