முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்பதாக விமர்சித்தார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும் கூறிய நிலையில் அது போன்று எதுவும் இல்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி கனவு காண்கிறார். கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விடும் என்று ஜோசியம் சொல்கிறார் என்று முதல்வர் கூறியிருந்தார். இதற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது இன்று சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அவர் பேசியதாவது, நான் கனவு காண்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு சரிவும் அதிமுகவுக்கு செல்வாக்கும்  ஏற்பட்டுள்ளது. திமுகவை பொருத்தவரையில் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் பதவிக்கு வர முடியும். கருணாநிதிக்கு பின் ‌ அவருடைய மகன் ஸ்டாலின் முதல்வரான நிலையில் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். திமுக கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போன்று மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். பொய்யை அழுத்தமாக கூறினால் மெய் திருத்திருவென முழிக்குமாம். அப்படித்தான் அவர்கள் பேசுவது உள்ளது.

திமுகவை பொருத்தவரையில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் உயர்ந்த இடத்துக்கு வர முடியும். மத்தியில் அதிகாரம் என்னும் என்பதற்காக மட்டும்தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 100 ஏரிகளில் நீர் பிரம்மாண்டத்திட்டத்தை அதிமுக தொடங்கி வைத்த நிலையில் அந்தத் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளது. அதாவது அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர்கள் இப்படி கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். மேலும் தமிழக மக்களின் மகத்தான ஆதரவால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அப்போது 100 எரிகள் திட்டத்தை நானே முன்நின்று தொடங்கி வைப்பேன் என்று கூறினார்.