கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் சுமார் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இணையவழி காவல்துறை காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த மோசடி கும்பல் கோயம்பத்தூரை தலையிடமாக கொண்டு நடிகை தமன்னா மற்றும் பல சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மிகப் பிரமாண்டமாக 2022 ஆம் வருடம் துவக்க விழாவை தொடங்கினார்கள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு காஜல் அகர்வாலை வைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்சம் வரை இருக்கும் கார்களை முதலீடு செய்வதற்கு ஏற்ப பரிசாக வழங்கியுள்ளார். இவர்கள் இணையவழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை திருடுவதற்கும் உடந்தையாக இருந்தது இரண்டு வழக்குகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கிரிப்டோ கரன்சி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளார்கள். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால் இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.