பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை மாநகராட்சி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இருந்து வரும் நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தனியாருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஓராண்டு கொடுப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதில் முக்கியமாக 358 பள்ளி மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 33,000 மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில், இது செயல்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் இதற்காக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் போது முறையாக எந்தவிதமான சிரமமும் இல்லாமல் திட்டம் சரியாக நடத்தப்பட்டு வருகிறது, பின்னர் ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும், இது மாநகராட்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு மேயர் பிரியா பதிலளிக்கும் போது, சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பிற பகுதிகளிலும் ஏற்கனவே தனியாருக்கு கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் அடிப்படையில் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எனவே சென்னையில் அதுபோன்றுதான் தனியாருக்கு கொடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இன்று தீர்மானத்திற்கு மாமன்ற கூட்டத்தில் பெருமளவுக்கு ஆதரவு இருந்ததன் அடிப்படையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.