நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் முழுவதும் ரூபாய்.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகள் மற்றும் 158 பெட்ரோல் பங்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கிடும் அடிப்படையில் பணிகளானது நடந்து வருகிறது. சேலம் இரும்பு ஆலையில் இயற்கை எரிவாயு மையம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சேலம் மாநகர பகுதி முழுவதும் குழாய் வாயிலாக இயற்கை எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த இயற்கை எரிவாயு மையத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன்ஸ் பிரிவு இயக்குநர் டி.எஸ் நானாவேர் துவங்கி வைத்தார். 450 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ள சூழலில் முதற்கட்டமாக 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் குழாய் வாயிலாக தொடங்கியுள்ளது. சேலத்தில் முதல்முறையாக வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டமானது துவங்கப்பட்டிருக்கிறது.