“சிறுவர்கள் கார்ட்டூன் பார்க்கும் வயதில், நீங்கள் பந்துவீச்சாளர்களின் பந்துகளைக் கார்ட்டூனாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்களே.. உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?” என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) எழுப்பிய கேள்விக்கு, ஐபிஎல் 2026-ன் இளம் சாதனையாளர் வைபவ் சூர்யவன்ஷி அளித்துள்ள சுவாரசியமான பதில் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.
“போட்டிக்கு முன்னால் என் மனதில் பெரிதாக எதுவுமே ஓடுவதில்லை; இப்போதும் கூட மேட்ச் தொடங்குவதற்கு முன்னால் கார்ட்டூன் பார்ப்பதை நான் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளேன். அதனால் ஆமாம், நான் இப்போதும் கார்ட்டூன் பார்க்கிறேன்” எனச் சிரித்துக்கொண்டே மழலை மாறாமல் அவர் பதிலளித்துள்ளார்.
மைதானத்திற்குள் நுழைந்தால் அசுர வேகப் பந்துவீச்சாளர்களைத் தனது அதிரடி ஆட்டத்தால் நிலைகுலையச் செய்யும் இந்த 15 வயது சிறுவன், நிஜ வாழ்க்கையில் இன்னும் ஒரு சுட்டிப் பையனாகவே கார்ட்டூன் பார்த்து மகிழ்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இளம் வயதிலேயே ஐபிஎல் வரலாற்றில் அதிவேக 500 ரன்கள் மற்றும் மிக இளம் வயது வீரர் போன்ற இமாலய சாதனைகளைத் தனது வசமாக்கியுள்ள வைபவ், அழுத்தமான சூழலிலும் எப்படி இவ்வளவு நிதானமாக இருக்கிறார் என்பதற்கான விடையாக அவரது இந்த ‘கார்ட்டூன்’ ரகசியம் அமைந்துள்ளது.
“மனதில் எந்தச் சுமையும் இல்லாமல் விளையாடுவதே எனது பலம்” என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார் இந்த பீகார் சிங்கம். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளைச் சிக்ஸருக்குப் பறக்கவிட்டுவிட்டு, மீண்டும் அறைக்குச் சென்று கார்ட்டூன் பார்க்கும் இந்தச் சுட்டிப் பையனின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ‘க்யூட்’ வைரலாகி வருவதுடன், கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு புதுவிதமான உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
