
விருதுநகர் மாவட்டத்தில் 17 வயதுடைய மாணவி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி கலை திருவிழாவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார். இந்த நிலையில் 17 வயது சிறுமியையும் மற்றொரு 14 வயது சிறுமியையும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக அரசு கோட்டையில் வசிக்கும் கணித ஆசிரியர் ராஜாமணி காரில் அழைத்து சென்றார். முதலில் 14 வயது சிறுமியை போட்டியில் நடக்கும் பள்ளியில் இறக்கி விட்டார்.
இதனையடுத்து 17 வயது சிறுமியை அவருக்கான போட்டி நடக்கும் பள்ளியில் இறக்கிவிட அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து போட்டி முடிந்து வந்த 17 வயது சிறுமிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். அவர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.