தமிழக அரசு காப்புக்காடுகளுக்கு அருகே குவாரி செயல்பட அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் குவாரி பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்போதும் நடைமுறையில் இருக்கிறது. காப்பு காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளியும் பின்பற்றப்பட்டு வருகிறது. விதிகளுக்கு உட்பட்டே குவாரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி குவாரிகள் இயங்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.