உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அணில் சிங் சவுத்ரி என்பவர் 2004 ஆம் ஆண்டு விபத்து காப்பீடு எடுத்துள்ளார். இந்த காப்பீடு விதிமுறைகளின் படி விபத்தில் அணில் சிங் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு 80 லட்சம் கிடைக்கும் என்பதாகும். இந்த பணத்திற்கு ஆசைப்பட்ட அணில் சிங் அவரது தந்தை விஜய்பால்சிங் மற்றும் குடும்பத்தினர் போலியான ஒரு மரணத்தை உருவாக்கி 80 லட்சம் காப்பீடு தொகையை பெற்றுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக 2006 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்ததாக காப்பீடு பணத்தை பெற்ற இந்த மோசடி வழக்கு தொடர்பாக 17 வருடங்கள் கழித்து சமீபத்தில் அணில்சிங் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது காப்பீடு பணம் வேண்டும் என்று முடிவு செய்த அணில்சிங் திட்டமிட்டு 2004 ஆம் ஆண்டு விபத்து காப்பீடு எடுத்துள்ளார்.

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு ரயிலில் சந்தித்த யாசகர் ஒருவரை உணவு வாங்கி கொடுப்பதாக அணில்சிங் அழைத்து சென்றுள்ளார். அந்த யாசகருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது காரில் யாசகரின் சடலத்தை வைத்து விபத்து ஏற்பட்டு கார் எரிந்தது போன்று ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை விஜய்பால் சிங் இறந்தது தனது மகன் தான் என அடையாளம் காட்டியுள்ளார்.

இதனால் காப்பீடு தொகை 80 லட்சம் விஜய்பால்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிடைத்த பணத்தை பங்கு போட்டு தனது பங்கை பெற்றுக்கொண்ட அணில்சிங் சவுத்ரி அகமதாபாத் சென்று அங்கு தனது பெயரை ராஜ்குமார் சவுத்ரி என்று மாற்றிக்கொண்டு புதிய வாழ்க்கையை வாழத் துவங்கியுள்ளார். இந்த நிலையில் தான் காவல்துறையினருக்கு அணில்சிங் சவுத்ரி உயிருடன் இருப்பது தெரிய வர அவரை கைது செய்துள்ளனர்.