தாய்லாந்தின் கலாசின் பகுதியில் உள்ள பிரச்சாயா ரிசார்ட்டில், ஜூன் 28-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்வு உலகளாவிய அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 4 வயதான இரட்டையர்கள் தட்சனாபோர்ன் சோர்ன்சாய் மற்றும் தட்சதோர்ன் ஆகியோருக்கு,  பெற்றோர் ஒரே நேரத்தில் “திருமண சடங்கை” நடத்தினர்.

பௌத்த நம்பிக்கையின் அடிப்படையில் இது ஒரு “அடையாள திருமணம்” எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த சிறப்பு திருமண விழாவில் புத்த துறவிகள் பங்கேற்று ஆசீர்வாதம் வழங்கினர். இந்த வைரலான நிகழ்வுக்கான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

விரிவாக பார்க்கும்போது, வீடியோவில் உள்ள சிறுமி, தனது சகோதரனின் கன்னத்தில் முத்தமிடும் காட்சியுடன் திருமண விழா தொடங்குகிறது. அதன்பின்னர், தம்பதியாக நடிப்பதுபோல் இருவரும் சடங்கு நடைமுறைகளில் பங்கேற்கின்றனர்.

புத்த துறவிகள் வழிகாட்டும் மந்திரங்களுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும், இந்த இரட்டையர்களின் குடும்பம், மணமகளுக்குப் பரிசாக நான்கு மில்லியன் தாய் பாட் மற்றும் 180 பாட் எடையுள்ள தங்க நகைகள் வழங்கி, பாரம்பரிய தாய் வரதட்சணை ஊர்வலத்தை நடத்தியது.

தாய் பௌத்த நம்பிக்கையின் படி, எதிர்பாலின இரட்டையர்கள் தங்கள் முந்தைய பிறவியில் காதலர்களாக இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களுக்கு திருமணம் நடைபெறாவிட்டால் துரதிர்ஷ்டம் ஏற்படும், நோய்கள் தாக்கும், அல்லது ஒருவரை ஒருவர் இழக்க நேரிடும் என்பதுபோன்ற நம்பிக்கைகள் இதற்குப் பின்னால் உள்ளன.

இதனால், பல குடும்பங்கள் குழந்தை வயதிலேயே இந்த அடையாள திருமணத்தை நடத்துகிறார்கள். இது உலக பார்வையில் வியப்பை தூண்டியும், கலாசாரப் பரப்புகளில் விவாதத்தை ஏற்படுத்தியும் வருகிறது.