
குஜராத் மாநிலத்தின் பரூக் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம், தற்போது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஒரு பெண், அங்கு வசிக்கும் ஒரு இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தும், அந்த பெண் தனது தாய் வீட்டுக்குச் செல்கிறேன் என்று கூறி வெளியே சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அவர் அந்த இளைஞருடன் தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள், அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று முதலில் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கழித்தும் எதுவும் நடக்காததால், அவர்கள் நேரடியாக நடவடிக்கையில் இறங்கி, புல்டோசர் கொண்டு அந்த இளைஞரின் வீட்டை இடித்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தலைமறைவாக உள்ள இளைஞரின் தாயார் போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் பெண்ணின் கணவர் உள்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். பொதுவாக, உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோதமாக இருந்த கட்டடங்களை அரசு புல்டோசர் கொண்டு இடிக்கிறது. ஆனால் குஜராத்தில், தனிப்பட்ட விவகாரத்தில் ஒருவர் மற்றொருவரின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்திருப்பது, சட்ட ஒழுங்கு கேள்விக்குள்ளாகி உள்ள சூழலை உருவாக்கியுள்ளது.