பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், கடந்த 70 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், தற்போது உயிருடன் திரும்பி வந்ததையடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறுவன் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி திடீரென காணாமல் போனார். அவரின் குடும்பத்தினர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்படி ம புகார் பதிவு செய்தனர். சில நாள்களில், அவர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பணம் 45,000 ரூபாய் கேட்டு தொலைபேசியில் அழைத்தனர். அதில் அவர்கள் 5,000 ரூபாயை தவிர்க்க முடியாமல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பிப்ரவரி 28ம் தேதி ரயில் பட்டறையில் கடுமையாக காயம் அடைந்த ஒரு சிறுவன் மீட்கப்பட்டார். அவர் தர்பங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 1ம் தேதி உயிரிழந்தார். உடனே அவரது குடும்பத்தினர் அழைக்கப்பட்டு, உடலை அடையாளம் காணச் சொல்லப்பட்டதுடன், அவர்கள் சந்தேகங்களை வெளியிட்டும், டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியதையும் காவல்துறையினர் நிராகரித்து, அதே உடலை தங்கள் மகனாக ஒப்புக்கொள்ள பலத்த அழுத்தம் செய்ததாக தெரிவித்தனர்

இதையடுத்து, அந்த சிறுவனின் உடல் கிரியாபூமியில் சடங்குகளுடன் எரிக்கப்பட்டது. சமூக நலத்துறை சார்பில் 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இது தொடர்பாக தர்பங்கா பகுதியில் பெரிய அளவில் மக்களின் எதிர்ப்பு எழுந்தது. காவல்துறையின் அலட்சியத்தை கண்டித்து மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்துக்குப் பொறுப்பாக இருந்த காவல் நிலைய அதிகாரி பராமரிப்பு தவறாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அதே சிறுவன் திடீரென உயிருடன் மீண்டு வந்தார். தர்பங்கா சிவில் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகிய அவர், “பிறர் முகத்தை மூடி கடத்தி விட்டனர். நான் விழித்துப் பார்த்தபோது நேபாளத்தில் இருந்தேன். சில நாட்களுக்கு பிறகு என்னை கடத்திய கடத்தல்காரர்கள்  கதவை பூட்டாமல் விட்ட நிலையில் நான் தப்பித்து, அங்குள்ள மக்களின் உதவியுடன் என் குடும்பத்துடன் தொடர்பு கொண்டேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

தங்களது மகன் தான் உறுதி செய்யப்பட்டதும், வீடியோ அழைப்பு மூலம் அவரது குடும்பம் அவரை நேரில் அழைத்துச் சென்று மீட்டனர். குடும்பத்தினர் தெரிவித்ததாவது, “மரணம் உறுதி செய்யப்படாத நிலையில், எமோஷனலாகக் கழிந்த நேரத்தில் அந்த உடலை எங்களுடைய பிள்ளையாகவே ஏற்றோம். காவல்துறையின் அழுத்தம் காரணமாக டிஎன்ஏ சோதனை கூட செய்ய முடியவில்லை” என கூறினர். தற்போது, நன்கு திரும்பியுள்ள சிறுவனைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, பெறப்பட்ட நிவாரணத் தொகையையும் திருப்பி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் உறுதிப்படுத்தியதாவது, “சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். கடத்தல் சம்பவம், மேலும் எரிக்கப்பட்ட உடலின் உண்மை அடையாளம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் யார் என்பதை விரைவில் கண்டறிவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது தர்பங்கா மாவட்டம் முழுவதும் பெரும் விவாதமாகி உள்ளது.