
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான சிவ் பிரகாஷ் திரிபாதி, தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப சிக்கலால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றாலும், பின்னர் மனைவி பிரியா ஷர்மாவுக்கு மற்றொருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது அவரது கணவருக்கு தெரியவந்தது. இது குறித்து திரிபாதி ஏதும் வெளிப்படையாக கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதற்கிடையில், ஒரு விபத்தில் சிக்கிய திரிபாதி நடக்க முடியாத நிலைக்கு ஆளாக, இந்த நேரத்தில் மனைவி தனது குழந்தைகளை அழைத்து பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். திரிபாதி பலமுறை மனைவியை சமாதானப்படுத்த முயற்சித்தபோதும், பிரியா அவருடன் செல்ல மறுத்ததோடு தாக்குதலும் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இறுதியாக, மனமுடைந்த திரிபாதி வீட்டிற்கு சென்று கதவை உள்ளே பூட்டி, இன்ஸ்டாகிராமில் 44 நிமிடங்கள் லைவ் வீடியோவாக தற்கொலை செய்து கொண்டார். அந்த லைவ் வீடியோவை மனைவி பார்த்தபோதும் எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக திரிபாதியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், குடும்ப வன்முறை மற்றும் மனைவியின் உறவுக் கோளாறு காரணமாகவே தற்கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. தற்போது பிரியா ஷர்மா மற்றும் அவரது தாயாரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.