
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவின் போது திமுக அரசு 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறும் நிலையில் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் அவர்களை மைனஸ் ஆக்கி காட்டுவார்கள் என்றும் கூட்டணியை மட்டும் நம்பித்தான் திமுக உள்ளது என்றும் கூறினார். இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மழை வெள்ளத்தினால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நடவடிக்கையால் விரைந்து மீண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது நம்முடைய முதல்வர் மக்கள் பாராட்டில் நனைந்து கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு வருகிற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற இலக்கு இருந்த நிலையில் நாங்கள் 234 தொகுதிகளையும் வென்று காட்டுவோம். ஆனால் எங்களுடைய நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர் பேசிக் கொண்டிருக்கிறார். இனி எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல. 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றி காட்டும். இனி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதெல்லாம் அவதூறு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இனி 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் திமுக தொண்டர் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க தொடங்குவார். மேலும் இனிவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலினை நாங்கள் முதலமைச்சர் ஆக ஆக்கி காட்டுவோம் என்று கூறினார்.