திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி.குரும்பபட்டி கிராமத்தில் புதுக்குளம் ஓடை உள்ளது. இந்த ஓடை வரத்து வாய்க்காலை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்கள் பெண் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி கொட்டியது. இதனால் 40 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செயலர் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பெண்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 5 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.