
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கடும் எச்சரிக்கையுடன் கருத்து வெளியிட்டார். “இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் பழிவாங்குவோம். இது மோடியின் இந்தியா – இதில் பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது” என அவர் உறுதியாக தெரிவித்தார். ‘சுன் சுன் கே பத்லா லெங்கே’ என்று அவர் ஹிந்தியில் சொன்ன உரை, மக்கள் மத்தியில் வீர உணர்வை தூண்டியது.
அத்துடன், இந்தியா பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுக்கும் உறுதிப்பூர்வ நோக்கத்துடன் செயல்படுவதாகவும், இந்தப் போராட்டம் இன்னும் நிறைவேறவில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுடன் இருப்பதை குறிப்பிட்ட அவர், “140 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள நாடுகளும் இந்தியாவுக்கு துணை நிற்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாம் தனியாக இல்லை” என்று கூறினார். இது போல கோழைத்தனமான தாக்குதல்களால் இந்திய மக்களின் மன உறுதியை குறைக்க முடியாது என்றார்.
ஏப்ரல் 22ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானின் தொடர்புகளை குறைத்ததோடு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்கி, விசாக்களையும் ரத்து செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனையில், இந்திய ஆயுதப்படைகளுக்கு முழுமையான நடவடிக்கைகள் எடுக்கச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.