இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால், ஒரு தரப்பை மட்டும் அங்கீகரிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும் கட்சி சின்னம் முடக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் வாதிட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பை பதிவுசெய்தது. தேர்தல் ஆணையம் மாறுப்பட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. இதற்கிடையில் தங்களின் தரப்பு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால், கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், அ.தி.மு.க விவகாரத்தில் இருதரப்பும் ஏன் பேசி முடிவுசெய்யக்கூடாது என கேள்வி எழுப்பியது.

பிரச்னைகளை நீடித்துக்கொண்டே செல்ல முடியாது என கூறிய நீதிபதிகள், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினரை உள்ளடக்கிய பொதுக் குழுவே வேட்பாளரை இறுதிசெய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக் குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் எனக் கூறிய நீதிபதிகள், முடிவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு மட்டுமே செல்லும் எனக்கூறி, எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதோடு இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் எனவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து இருக்கிறது.