ஒரே ஓவரில் சூர்ய குமார் யாதவ் 4 சிக்ஸர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1:30 மணிக்குதொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் இருவரின் சிறப்பான சதம் மற்றும் சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் இருவரின் அரைசதத்தால் டீம் இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

 

துவக்க வீரர் ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், கில் – ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்தனர். ஷ்ரேயஸ் ஐயர் 90 பந்துகளில் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்) 105 ரன்கள் எடுத்தார். கில் 97 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 104 ரன்கள் எடுத்தார். அதேபோல கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்) 72 ரன்கள் விளாசினார். இதனிடையே மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் அதிரடியாக 38 பந்துகளில் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) 52 ரன்களும், இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 400 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்து  வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி வருகிறது.

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடியதன் மூலம் தனது 4வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அரைசதமடித்த அதே ஃபார்மைத் தொடர்ந்தார். தனக்கு ஒருநாள் கிரிக்கெட் செட் ஆகாது என்று கூறியவர்களுக்கு இந்த அரை சதத்தால் பதில் சொன்னார் சூர்யா. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை விளாசினார். கேமரூன் கிரீனின் 44வது ஓவரில் சூர்யா இந்த சாதனையை நிகழ்த்தினார். சூர்யாவின் 4 சிக்ஸர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சூர்யாவின் 4 சிக்ஸர்களின் வீடியோவையும் பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.