• ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
  • ஷ்ரேயஸ் ஐயர், கில் இருவரின் சதம் மற்றும் சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் அரை சதத்தால் இந்திய அணி 399 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1:30 மணிக்குதொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா தனது குடும்பத்தினரை சந்திக்க வீட்டிற்கு சென்றதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.

எனவே அவருக்கு பதிலாக 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் அணியில் இணைந்துள்ளார். மேலும் பிரசித் கிருஷ்ணா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ் ஓய்வு எடுத்துள்ள நிலையில், ஸ்பென்சர் ஜான்சன் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். எனவே ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தினார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களம் இறங்கிய நிலையில், ஹேசில்வுட் வீசிய 4வது ஓவரில் ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் கில் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷ்ரேயஸ் ஐயர் தொடக்கம் முதலே பாசிட்டிவ் மைண்ட் செட்டில் பவுண்டரிகளாக அடித்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தார். அதன்பின் கில்  பொறுமையாக ஆரம்பித்தாலும், அதன் பின் அவரும் அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடந்தனர். பின் ஷ்ரேயஸ் ஐயர் 86 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து கில்லும் தனது 6வது ஒருநாள் சதமடித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 90 பந்துகளில் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்) 105 ரன்கள் எடுத்தார். கில் 97 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 104 ரன்கள் எடுத்தார்.

அதன் பின் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கில் இருவரும் ஆட்டமிழந்த நிலையில், கேஎல் ராகுல் – இஷான் கிஷன் ஜோடி அதிரடி காட்டியது.  இஷான் கிஷன் அதிரடியாக 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வானவேடிக்கை காட்டினார். குறிப்பாக கேமரூன் கிரீன் வீசிய 44வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மறுபுறம் கேஎல் ராகுல் தன் பங்குக்கு அதிரடியாக 38 பந்துகளில் 52 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்) 72 ரன்களுடனும்,  ஜடேஜா 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்து  வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

 

முன்னதாக 2013 இல் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு இந்திய அணி 383 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் 350 ரன்களுக்கு மேல் இந்தியாவின் ஏழாவது ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு ஏழாவது அதிகபட்ச ஸ்கோராகும். .

இந்திய அணியின் லெவன் :

சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலியாவின்  லெவன் :

டேவிட் வார்னர், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), சீன் அபோட், ஸ்பென்சர் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஜம்பா.