இங்கிலாந்தில் நடந்து வரும் டி20 லீக் தொடரில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வில் ஜாக்ஸ் ஒரே ஓவரில் 31 ரன்கள் எடுத்தது பெங்களூரு அணி ரசிகர்களை திரும்பி பார்க்க செய்துள்ளது..

வில் ஜாக்ஸை 2023 ஐபிஎல் தொடரில் RCB 3.2 கோடிக்கு வாங்கியது. இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் ஒருவர் ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் காயம் காரணமாக வில் ஜாக்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆர்சிபியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

காயத்தில் இருந்து குணமடைந்த வில் ஜாக்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் சர்ரே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வில் ஜாக்ஸின் சம்பவத்தால் ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

மிடில்செக்ஸுக்கு எதிராக, ஹால்மேன் வீசிய 11வது ஓவரில் வில் ஜாக்ஸ் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 11வது ஓவரில் மட்டும் 31 ரன்கள் எடுக்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய வில் ஜாக்ஸ் 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 96 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் சர்ரே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது.

இதனால் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸை பயன்படுத்த வேண்டும் என பெங்களூரு அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 16 வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கோப்பையை வென்றதில்லை. ஒவ்வொரு முறையும் இ சலா கோப்பை எங்களுடையது என்று கூறும் ஆர்சிபி ரசிகர்களை அந்த அணி தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.

இப்போட்டியில் முதலில் ஆடிய சர்ரே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 96 ரன்களும், லாரெ எவன்ஸ் 37 பந்துகளில் 85 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய மிடில்செக்ஸ் அணி அதிரடியாக 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் ஸ்டீபன் எஸ்கினாசி 39 பந்துகளில் 73 ரன்களும், மேக்ஸ் ஹோல்டன் 35 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர். மேலும்  ரியான் ஹிக்கின்ஸ் 24 பந்துகளில் 48 ரன்களும், ஜோ கிராக்னெல் 16 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்..